மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும்! சுமந்திரன்
மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்கிற பொதுவான நிலையப்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயஙகள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இன்றைய சந்திப்பு 4 மணித்தியாளங்கள் வரை இடம்பெற்றுள்ளது. புரிந்துணர்வுடன் இன்றைய உரையாடல் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறுகின்ற போது, இலங்கை விடயத்தில் ஏற்கனவே அமுலில் உள்ள 40.1 என்ற தீர்மானம் முடிவுக்கு வர இருக்கிறது.
அதுமார்ச் மாதம் 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதாக இருந்தாலும் இந்த வருட ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களிற்கு ஒத்துழைக்க மாட்டோம் வெளியேறுகின்றோம் என்று அறிவித்தல் கொடுத்திருக்கின்றார்கள்.
இந்த சூழலில் விசேடமாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்விலே தமிழர் தரப்பிலே ஒன்றிணைந்த ஒற்றுமையான கோரிக்கையில் எதை நாங்கள் வைக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தான் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதுவரை மூன்று தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30.1 என்ற தீர்மானம், 2017 மார்சிலே 34.1 என்கின்ற தீர்மானம், 2019 மார்ச்சிலே 40.1 என்கின் தீர்மானம் என்பனவாகும்.
இனிமேல் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது.
ஆனாலும் இந்த மூன்று தீர்மானங்களும் எமது மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதிலே வெற்றி காணவில்லை.
ஆகையினாலே இதைவிட வீரியமான செயற்பாடு திறன் உள்ள தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் எல்லோரிடமும் இருக்கின்றது.
அத்தகைய ஒரு கோரிக்கையை சேர்ந்து முன்வைக்க வேண்டும் என்கின்ற கருத்தும் பொதுவாக இருக்கின்றது.
அதற்கு மாறாக இன்னுமொருகருத்தும் நிலவியது. ஜெனிவா பேரவையில் இந்த விவகாரம் இருக்குமளவும் இதை இன்னெரு தளத்திற்கு கொண்டு செல்வது கஸ்டமாக இருக்கும்.
ஆகையினாலே ஜெனிவாவிலிருந்து இந்த விவகாரத்தை கைவிட்டுவிட வேண்டும், சர்வதேவ நீதிமன்ற பொறிமுறை போன்றவற்றுக்குள் போவதற்கான பொறிமுறை எடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
எது எப்படியாக இருந்தாலும் அனைத்து தரப்பினுடைய கருத்துக்களையும் செவிமடுத்து விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்துக்களுக்கு விசேடமாக செவிமடுத்து இதை அணுகுகின்ற முறை எப்படியானது என்பது குறித்து தீர்மானங்களை எடுப்பதற்கும், சேர்ந்த கலந்துரையாடுவதற்கும் ஓர் சிறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த குழு தாமதமாகாமல் வரப்போகும் ஓரிரு நாட்களிற்குள் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஜெனிவா அமர்வுக்கு பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள், கடந்த காலங்களில் தனித்தனியாக சென்றமை பலவீனமானதாக காணப்பட்டதாக கருதலாமா என இதன்போது சுமந்திரனிடம் ஊடகவியலாளரொருவர் வினவியுள்ளார்.
இதற்கு சுமந்திரன் பதிலளிக்கையில், அது பலவீனமானதற்கு அப்பால், இன்றைக்கு இலங்கையில் உள்ள அராங்கம் மிக பலம்பொருந்திய நிலையில் உள்ள அரசாங்கம்.
எங்களுக்கு நீதியை மறுப்பதிலே முனைப்பாக இருக்கின்ற அரசாங்கம். ஆகையினாலே அப்படியான அரசாங்கத்தை கொண்டிருக்கின்ற நாங்கள் எண்ணிக்கையிலும் சிறுபான்மையினராக இருக்கின்றோம், பலத்திலும் குறைவானவர்களாக இருக்கின்றோம்.
குறைந்தது நாங்கள் ஒன்றாக நின்றாலாவது எங்களுக்கு உள்ளே பலத்தை கூட்டிக்கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையிலே தான் இன்றைக்கு இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளாமை தொடர்பிலும் அவரிடம் வினவப்பட்டுள்ளது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், இன்றைய கூட்டத்தினை புறக்கணித்ததாக சொல்லப்படவில்லை. வரவிருந்தவருக்கு வேறு வேலை இருந்ததாக தான் சொல்லப்பட்டிருந்தது.
ஆகவே அந்த கட்சியில் ஒருவரைத்தவிர கூடுதலான ஆட்கள் இருக்கிறதாக தான் நம்புகிறேன். ஒருவர் வரமுடியாவிட்டாலும் இன்னொருவரையாவது அனுப்பியிருக்கலாம்.
ஆனாலும் அடுத்த கூட்டத்திற்கு வருவார்கள் என்று நம்புகின்றோம். அனைவரோடும் பயணிப்பதுதான் நல்லது. அடுத்தடுத்த கட்டங்களில் பேசி தீர்மானிப்போம் என கூறியுள்ளார்.