பேரணியின் உண்மை முகமும் இலங்கை அரசாங்கத்தின் தடையும்
10 அம்சக் கோரிக்கைகளுடனான எழுச்சிப் பிரகடனத்துடன் அம்பாறை பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான மக்கள் பேரணி யாழ்ப்பாணம் ,பொலிகண்டியில் நிறைவுபெற்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட வாகன மற்றும் நடைப்பயணப் போராட்டமாக அமைந்தது.
நீதிக்கான இப்பயணத்திற்கு ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ செல்லும் பாதை என பெயரிடப்பட்டது.
இது பாரம்பரிய தமிழர் தாயகத்தின் இரண்டு தூர முனைகளையும், தெற்கே அம்பாறையில் பொத்துவில் முதல், வடக்கு முனையில் பருத்தித்துறையில், பொலிகண்டி வரையிலும் குறித்து நிற்கிறது.
இப்பேரணி கிழக்கிலங்கையின் தெற்கு முனையில் உள்ள பொத்துவில் நகரில் 2021 பெப்ரவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகி வட மாகாணத்தின் வடமுனையில் அமைந்துள்ள பொலிகண்டியில் பெப்ரவரி 7 இல் நிறைவடைந்தது.
வடகிழக்குத் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தமது ஆதரவைத் தெரிவித்து பேரணியில் இணைந்து கொண்டன.
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றிய இந்தப் பேரணியில் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்குப் பதிலளிக்காமை, கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை உள்ளடங்களாக பல்வேறு விடயங்களுக்கு நீதி கோரியும், தீர்வு கேட்டும் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
பெருந்திரளான மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதலுடன் பேரணியின் இறுதி நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணியின் நிறைவாக எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்குகின்ற 10 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தும் கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
