ராஜபக்சவினர் ஒழிந்துக்கொண்டுள்ளனர்:ஜனாதிபதி எங்கு இருக்கின்றார் என்பது தெரியவில்லை
காலிமுகத் திடலில் இளைஞர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இளைஞர்களின் இந்த போராட்டம் காரணமாக ஜனாதிபதி உட்பட ராஜபக்சவினர் ஓடி ஒழிந்துக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி எங்கு போனர் என்பதும் தெரியவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஷ நாணயக்கார, முஜிபுர் ரஹ்மான், ஹரின் பெர்னாண்டோ, ஹெக்டர் ஹப்புஹாமி, காவிந்த ஜெயவர்தன ஆகியோர் இதனை கூறியுள்ளளனர்.
மனுஷ நாணயக்கார
“காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பொலிஸ் வாகனங்களை அனுப்பி, 4 ஜி, 5 ஜி தொலைபேசி கோபுரங்களை அமைத்து, போராட்ட களத்திற்கு வருவோரை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர்.போராட்ட களத்திற்கு வருவோர் பயப்பட வேண்டாம்.
ராஜபக்சவின் அச்சமடைந்துள்ளனர். பிள்ளைகள் ஒவ்வொரு இடத்தில் ஒழிந்துள்ளனர். தந்தை, சிறிய தந்தைகள் வெவ்வேறு இடங்களில் ஒழிந்துக்கொண்டுள்ளனர். மேலும் சிலர் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல உலங்குவானூர்திகளை தயாராக வைத்துள்ளனர்.
இவர்கள் அச்சமடைந்து வீடுகளுக்கு சிறைப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாகவே இவர்களை வீடுகளுக்கு சிறைப்படுத்த முடிந்தது. இதனால், இந்த போரட்டத்தை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கு தேவையான அரசியல் பலத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். போராட்ட களத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அதனை தடுக்க பலத்தையும் சக்தியையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.”
முஜிபுர் ரஹ்மான்
“கொழும்பு நகரில் கோட்டா கோ கிராமம் என்ற இடத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
மக்கள் விரோத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் பலம் பெற்றுள்ளது. போராட்டம் காரணமாக ஜனாதிபதி ஒழிந்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி எங்கு இருக்கின்றார் என்பதும் தெரியவில்லை. அரசாங்கத்தின் அமைச்சரவையும் காணாமல் போயுள்ளது. அரசாங்கத்தில் இருப்போர் ஒழிந்துக்கொள்ளும் அளவுக்கு போராட்டம் முன்னேறியுள்ளது. பலம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக இந்த போராட்டத்தை தோல்வியடைய செய்ய பல்வேறு வன்முறை குழுக்களை பயன்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமற்ற வன்முறை குழுக்களை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க அரசாங்கம் முயற்சிக்குமாயின் இளைஞர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தேவையான பலத்தையும் சக்தியையும் வழங்க தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை வழங்குகிறோம்.
இளைஞர்கள் மற்றும் மக்களின் இந்த எழுச்சியை அடக்க முயற்சித்தால், நாட்டில் இதனை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.”
ஹரின் பெர்னாண்டோ
“இளைஞர்கள் மேற்கொண்டு வரும் இந்த போராட்டம் அரசியல் கலப்பின்றி முன்னெடுக்கப்படும் போராட்டம். இதனால், நாங்கள் வெளியில் இருந்தாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் பாதிப்போ சேதமோ ஆபத்தோ ஏற்படுமாக இருந்தால், வெளியில் உங்களை பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எமது அரசியல் அணியும் ஏனைய அரசியல் கட்சிகளும், நாட்டில் எழுச்சி பெற்றுள்ள இளைஞர்களும் போராட்டம் வெற்றியை நோக்கி செல்ல உறுதுணையாக இருப்போம். விடுமுறை தினம் இன்னும் முடியவில்லை.
அப்படி இருக்கும் போது தொலைபேசி கோபுரத்தை அமைக்க எப்படி தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அனுமதியை வழங்கியது. இது ஒரு மறைமுக விளையாட்டு. புதிய அமைச்சரவையில் தலைகளை மாற்றவே இந்த விளையாட்டை நடத்தி வருகின்றனர்.
அதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் எதிர்ப்பது போலவே நாங்களும் எதிர்க்கின்றோம். உங்களது பாதுகாப்புக்கு நீங்கள் வர சொல்லும் நேரத்தில் வருவதற்கு நாங்கள் தயார்.”
ஹெக்டர் ஹப்புஹாமி
“நாட்டு மக்கள் கஷ்டத்திற்கு உள்ளனதன் காரணமாகவே மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்திற்கு வந்தனர். நாட்டு மக்களுக்கு சாப்பிடவும் குடிக்கவும் உடுத்தவும் இல்லாமல் போதாலும் எரிவாயும், மின்சாரம் கிடைக்காததாலும் அவர்கள் வீதியில் இறங்கினர்.
ராஜபக்சவின் கொள்ளையிட்டனர் என்ற நிலைப்பாட்டு ஏற்பட்டதன் காரணமாகவே மக்கள் வெளியில் வந்தனர். அதற்கு பதிலளிப்பதை விடுத்து, தாக்கி விரட்ட தயாரானால், நாங்கள் அரசியல் கட்சியில் இருந்தாலும் மக்களின் போராட்டத்தை காப்பற்ற தேவையான பலத்தை அங்கு சென்று வழங்க தயாராக இருப்போம்.
மக்கள் வெளியில் நடத்தும் இந்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நடத்த தயாராக இருக்கின்றோம்.
மக்கள் ஜனநாயக உரிமை மீது கை வைக்க தயாராக வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். அப்படி கை வைத்தால் அது மிகப் பெரிய தவறு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.”
காவிந்த ஜெயவர்தன
“ராஜபக்சவினர், சிங்களம், தமிழ், முஸ்லிம், இன, மத பேதங்களால் பிரித்தனர். எனினும் மக்களின் இந்த போராட்டம் அனைத்து இன, மத மக்களையும் ஒன்றிணைத்துள்ளது.
இலங்கையர்கள் என்ற வகையில் எழுவோம் என்று உலகத்திற்கு செய்தியை வழங்கியுள்ளனர். இந்த ஐக்கியத்தை சிதைக்க அரசாங்கம் முயற்சிக்குமாயின்,அச்சுறுத்தி, தாக்கி, சுட்டு எமது இளைஞர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமாயின் நாங்கள் அந்த இளைஞர்களுடன் கட்சி, நிற பேதமின்றி நாங்கள் ஒன்றிணைவோம் என்பதை அரசாங்கத்திற்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இளைஞர்களுக்காக எமது உயிர்களை தியாகம் செய்ய நாங்கள் தயார் என்பதை தெளிவாக கூறுகின்றோம். போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு சென்று அரசியல் செய்ய நாங்கள் இதுவரை எதிர்பார்க்கவில்லை.
இனியும் அப்படி எதிர்பார்க்க மாட்டோம். இளைஞர்களின் போராட்டம் சுயாதீனமான போராட்டம். அதன் மீது கை வைக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.”