தொலைபேசியை அதிபர் பறித்ததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் தற்கொலை செய்ய முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (04.05.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான-அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதுடன் ஒவியம் வரைவதற்காக நேற்று இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை எடுத்து சென்றுள்ளார்.
தொலைபேசி உபயோகிப்பு
இதன்போது குறித்த மாணவன் தொலைபேசியினை பாடசாலையினுள் உபயோகிப்பதை அவதானித்த அதிபர்
தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை சந்திக்க வேண்டும் எனவும்
கூறியுள்ளார்.
அத்துடன் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொலைபேசியினை வழங்குமாறு கோரியுள்ளார்.
எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காதையடுத்து மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.
அதிபர் முறைப்பாடு
இதுகுறித்து மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் பொலிஸாரிடம் அதிபர் முறைப்பாட்டினை விடுத்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையிலேயே அவமானத்தை தாங்க முடியாமல் அந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்தையடுத்து வலய கல்வி பணிமனை அதிகாரிகள் மாணவனின் பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு
இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 12 ஆம் திகதி முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர்.
இதற்கமைய வலயக்கல்விப் பணிப்பாளர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.