வடக்கு நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு : நவம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்பு!
நாட்டின் கிழக்குப் பகுதியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்வரும் நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்குக் கரையை அண்மித்தவாறு வடக்கு நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக கிழக்குப் பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நவம்பர் 15ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு
தற்போது இலங்கை ஆண்டின் இரண்டாவது பருவமழை இடைக்காலப் பகுதியில் இருப்பதாலும், 'எல் நினோ' நிகழ்வின் தாக்கம் நிலவுவதாலும், தீவின் எந்தப் பகுதியிலும் மாலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

எனவே, அபாயத்திற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்றும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் எச்சரிக்கைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.