நாளை நாடாளுமன்றில் 2027 வரவு செலவுத் திட்டம்: விவாதம் முதல் இறுதி வாக்கெடுப்பு வரை..
நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாளை (12.11.2026) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது, ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார், இது 2027-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பாக பார்க்கப்படுகின்றது.
2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 13 முதல் டிசம்பர் 14 வரை மொத்தம் 26 நாட்களுக்கு நடைபெறும். இதில், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 வரை இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 20 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
குழு நிலை விவாதம் (Committee Stage Debate), நான்கு சனிக்கிழமைகள் உட்பட, நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை மொத்தம் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு, டிசம்பர் 14 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
2027-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம், கடந்த 2026 அக்டோபர் 7 அன்று நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம்
இதற்கிடையில், வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் 22(1) முதல் 22(6) வரையிலான விதிகளின் கீழான நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் என்று நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை வாய்மொழி மூலமான பதில்களுக்கான ஐந்து கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை நிலையியல் கட்டளை 27(2)-ன் கீழான கேள்வி முன்வைக்கப்படும்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.
இந்த நிலையில், வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14 ஆகிய நாட்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு பிந்தைய காலப்பகுதி, அமர்வு ஒத்திவைக்கப்படும் வேளையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களுக்காக மாலை 6.30 மணி வரை நேரம் ஒதுக்கப்படும்.