மக்களை அச்சுறுத்தும் ஜனாதிபதியின் பேச்சு: எழுந்துள்ள கண்டனம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருப்பதாகவும் வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(18.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.
நிதி பெறும் வழிகள்
உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வளங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.
மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.
அந்த வகையில் உளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அநுரவும், அவருடைய நாடளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |