200 அடி தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறி இளைஞரொருவர் எடுத்த விபரீத முடிவு
வவுனியா - தேக்கவத்தை பகுதியில் இன்று (27) மாலை தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தனது மனைவியை அவரது குடும்பத்தினரிடமிருந்து மீட்டுத்தருமாறு கோரி,தனது மனைவி வரும் வரை கோபுரத்திலிருந்து இறங்கமாட்டேன் என தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் நீண்ட நேரமாகியும் இளைஞரை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளாமையினால் கோபமடைந்த இளைஞரின் உறவினர்கள் ஏ9 பிரதான வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாகியதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் வவுனியா தலைமை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த இளைஞரின் மனைவியை மீட்டுத்தருவதாக
உறுதி வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இளைஞரின் உறவினர்கள் ஒலிபெருக்கி மூலம் கோபுரத்தில் இருந்த இளைஞரை இறங்குமாறு தெரிவித்த நிலையில் அவர்களது வாக்குறுதியை நம்பி 4 மணித்தியாலங்களிற்கு பின்னர் குறித்த இளைஞர் கீழே இறங்கியுள்ளார்.
கோபுரத்தில் நின்ற அவர் தனது கையினை கூரிய ஆயுதத்தால் அறுத்தமையால் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












