கி.பி. 1627இல் ஆரம்பித்த பழமையான பாடசாலை கிளி/பளை றோ.க.த.க.பாடசாலை
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் பழமையான பாடசாலையாக புலோப்பளையில் அமைந்துள்ள கிளி/பளை றோ.க.த.க பாடசாலை அமைந்துள்ளது.
இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவினுள் அமைந்துள்ளது.
இந்த பிரதேச செயலகம் கிளிநொச்சி மாவடடத்தின் நிர்வாக அலகினால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கையின் பாடசாலைகள் வரலாற்றில் இன்றளவும் தொடர்ந்து இயங்கும் பாடசாலைகளில் இந்த பாடசாலையும் ஒன்றாக அமைகின்றமை பெருமைக்குரிய விடயமாக புலோப்பளை மக்கள் கருதுகின்றனர்.
பாடசாலையின் ஆரம்பம்
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் ஆய்வு முடிவுகளின்படி இந்த பாடசாலை கி.பி.1627 இல் ஆரம்பிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் முதல் பாடசாலையாக இது இருக்கின்றது.
யேசு சபையின் குருமார்களால் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்தவ பாடசாலையாக தொடர்கின்றது என்றும் மேலும் அவர் தன் முடிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த பாடசாலையானது இலங்கையின் ஆட்சி ஒல்லாந்தருக்கு கைமாறிய போது தொடர்ச்சியை பேணுவதில் சில ஆண்டுகள் சிக்கலை எதிர்கொண்டு தடைப்பட்டிருந்தது.
எனினும் 1810 முதல் ஆங்கிலேயரின் பரிஸ்பற்றுப் பாடசாலையாக மீண்டும் இயங்க ஆரம்பித்தது. 1869 இல் ஆங்கிலேயரால் இலங்கையின் கல்வியானது ஒழுங்கமைக்கப்பட்டது. 1880 இல் மோர்கன் குழுவின் சிபார்சுகள் இந்த பாடசாலையின் நிர்வாக ஒழுங்கில் செல்வாக்குச் செலுத்தியது.
1888 இல் கத்தோலிக்க திருச்சபையின் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. 1961 இல் இந்த பாடசாலையை இலங்கை அரசாங்கத்திடம் கத்தோலிக்க திருச்சபையால் கையளிக்கப்பட்டது. 1983 இல் பாடசாலைகளின் தரப்படுத்தலில் தரம் இரண்டிற்கு தரம் உயர்த்தப்பட்டது. ( 1 முதல் 11 வரையான வகுப்புக்களுக்கான பாடசாலை)
1984 இல் இருந்து யாழ். மாவட்டத்தின் நிர்வகிப்பிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் நிர்வகிப்பிற்கு மாற்றப்பட்டது. இந்த பாடசாலையின் வரலாற்றினை முதன் முதலில் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் தன் ஆய்வின் முடிவுகளில் மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது விரிவான வரலாற்றை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்க வேண்டி ஒன்றாகும்.
யாழ். மாவட்ட பாடசாலைகளும் ஆரம்பித்த ஆண்டுகளும்
யாழ். மாவட்டத்தில் இன்று பிரபலமாக உள்ள பல பாடசாலைகளின் தோற்றம் பற்றி கலாநிதி செ.திருநாவுக்கரசு தன் கிளி/பளை றோ.க.த.க.பாடசாலையின் வரலாற்று ஆய்வுக் கட்டுரையில் (நானிலம் இதழ் 01 இல் இந்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. இந்த நூல் புலோப்பளை றோ.க.த.க பாடசாலையின் 388 ஆவது ஆண்டு நிறைவு விழா நூலாகும். 388 வது நிறைவு விழா 2015 ஆம் ஆண்டு பாடசாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டமையும் சுட்டிக் காட்டப்பட்ட வேண்டும்) குறிப்பிட்டுள்ளார்.
அந்த தகவல்களுடன் ஒப்பு நோக்கும் போது வட மாகாணத்தில் மிகவும் பழமையான பாடசாலையாக முதன்முதலில் தொடங்கப்பட்ட பாடசாலையாக இது அமைந்துவிடுகிறது.
கிளி/பளை றோ.க.த.க.பாடசாலை (1627)
01) தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (1816)
02) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1817)
03) யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி (1823)
04) பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை (1823)
05) உடுவில் மகளிர் கல்லூரி (1824)
06) யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி (1834)
07) மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலை (1836)
08) பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி (1838)
09) கோப்பாய் கிறித்தவக் கல்லூரி (1850)
10) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி (1850)
11) உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி (1852)
12) யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை (1867)
13) யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர்மடம் பாடசாலை (1862)
14) ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரி (புனித அந்தோனியார்)(1872)
15) சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி (1875)
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலைகள் தோற்றம் பெறும் முன்னர் திண்ணைக் கல்வி முறை, குருகுலக் கல்வி முறை போன்ற பாரம்பரிய கல்விமுறைகளே இருந்துள்ளன.
அத்தோடு பெண்களுக்கான கல்விக்கு முன்னுமையளிக்கப்படவும் இல்லை என்பது வரலாற்றில் உள்ள நோக்கத்தக் விடயமாகும்.
இலங்கையின் அந்நியராட்சிக் காலம்
கி.பி 1505 ஆல் போர்த்துக்கேயர் வருகையோடு ஆரம்பமானதாக கருதப்படுகின்றது. இந்த அந்நியராட்சிக் காலம் 1948 பெப்ரவரி 04 இல் இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றதோடு முடிவுக்கு வந்திருந்தமையை குறிப்பிடலாம்.
இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலம் கி.பி.1505 தொடக்கம் கி.பி.1658 வரையானதாகும். இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியைத் தொடர்ந்து ஒல்லாந்தர் ஆட்சி நிலவியது. இவர்களின் ஆட்சி கி.பி.1658 முதல் கி.பி.1796 வரை தொடர்ந்திருந்தது.
ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்திருந்தனர். அவர்களது ஆட்சி கி.பி.1796 முதல் கி.பி.1948 வரை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதமாற்றத்திற்குள்ளான இலங்கையரை தங்கள் சுதேச மதங்களுக்கு மாறுவதை தடுப்பதற்காகவே கல்வித்துறை மேம்பாட்டில் அக்கறை காட்டினார்கள் என்பது நோக்கத்தக்கது.
இன்றைய பாடசாலை
கிளி/பளை றோ.க.த.க.பாடசாலை தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பாடசாலையாக இயங்குகின்றது.
இந்தப் பாடசாலை கிளி/பளை றோ.க.த.க.பாடசாலை என அழைக்கப்படுகின்றது. இது புலோப்பளையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.