அடுத்த பிரதமர் மைத்திரி தான்! ரணில் ஜனாதிபதியாக பதவியேற்பார்: காரணத்தை கூறும் முக்கியஸ்தர்
எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல. அதில் ஒரு கூட்டணி கட்சி மட்டுமே. சஜித் பிரேமதாச எனது தலைவர் அல்ல. கூட்டணியின் தலைவர் அவ்வளவுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அரசியல் தலைவர்கள் மற்றும் தற்போதைய இலங்கை அரசியல் களம் தொடர்பில் விரிவாக கருத்துரைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரபலமான தலைவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கின்றீர்களே?
எனது பக்கத்தில் அமர்ந்தால் பிரதமர் ஆகிவிடலாம். ரணில் எனது பக்கத்தில் அமர்ந்தார். பிரதமர் ஆகிவிட்டார். தற்போது மைத்திரி வந்திருக்கின்றார். ரணில் ஜனாதிபதியாக ஆகலாம். மைத்திரி பிரதமர் ஆகலாம்.
என்ன செய்வது? நான் அந்த 13ஆம் இலக்க ஆசனத்தில் அமரவில்லையே.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
இவர் 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே நான் முரண்பட்டேன். அப்போது யுத்த காலப்பகுதியில் நடந்த விடயங்களுக்காக நான் இவரை எதிர்த்து இவருடன் முரண்பட்டேன். நேரடியாக அவருடன் முரண்பட்டோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இந்நாள் பிரதமர். நல்லவர். வல்லவர். அவரது பலமும் எனக்குத் தெரியும். பலவீனமும் எனக்குத் தெரியும். பலவீனம் குறித்து பேசமாட்டேன். பலம் என்னவென்றால் அவர் ஒருவராக வந்து ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவ்வளவுதான்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நான் அவரிடம் ஒரு விடயத்தை கூறினேன். அதாவது நீங்கள் சிங்கள மக்களின் மனதை வென்ற தலைவர். நீங்கள் ஒரு தீர்வை கொடுத்தால் நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனை செய்து காட்டுங்கள் என்று அவருக்கு நான் கூறினேன். மண்ணை மீட்டது போல் தமிழ் மக்களின் மனங்களை மீட்குமாறு கூறினேன். ஆனால் அவர் அதனை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
May you like this Video