கொழும்பு மாநகர சபை பாதீட்டுக்கு வாக்களித்த பெண் உறுப்பினர் அளித்த விளக்கம்
கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது பாதீட்டுக்கு எவ்வித இணக்கப்பாடுகள் அற்ற நிலையிலேயே எனது வாக்கை அளித்தேன் என முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சுஹாரா புஹாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுஹாரா புஹாரியை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தியது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,
வாக்களித்ததற்கான காரணம்
முதல் முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு நான் எதிராகவே வாக்களித்தேன்.ஏனென்றால் மாநகர சபை மேயர் தெரிவின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் எதிர்க்கட்சியில் 60 உறுப்பினர் இருப்பதை உறுத்திப்படுத்தவே எதிராக வாக்களித்திருந்தனர்.நானும் அதை உறுதிப்படுத்துவதற்கே வாக்களித்தேன்.
ஆனால் இந்த முறை வரவு செலவு திட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டியிருந்தது.அத்தோடு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது நானும் அறிவேன், எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும்.

ஆனால் எதிர்க்கட்சியில் வேறொரு காரணத்தை முன்கொண்டு செயற்படுவது தெரியவந்ததாலே நான் சார்பாக வாக்களித்தேன்.அதனால் நான் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்க தீர்மானித்தேன்.
பாரிய தொகை பணம் கொழும்பு மக்களுக்காக இந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
எனக்கு யாரும் அழுத்தங்கள் , கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை. எனது சுய விருப்பின் பேரிலேயே வாக்கை பயன்படுத்தினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.