புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - நாளை 10 பேர் பதவிப் பிரமாணம்
பத்து அமைச்சரவை அமைச்சர்கள் நாளைய தினம் (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, திரான் அலஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும், மக்கள் பாதுகாப்பு அமைச்சராக திரான் அலஸ்வும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
எஞ்சிய ஏழு பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகிறது. அவர்கள் பிற்பகலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.