ரணில் பிரதமர் பதவியை கேட்கவில்லை:ஜனாதிபதி நாட்டை காப்பாற்றி தருமாறு கோரினார்
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை பொறுப்பேற்றது சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட விடயம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது சம்பிரதாயங்களை மீறிய செயல் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 37 வது ஷரத்தை வாசித்தால் அதனை இலகுவாக புரிந்துக்கொள்ள முடியும். பிரதமர் பதவி ரணில் விக்ரமசிங்க கேட்டு பெற்றுக்கொண்டது அல்ல.
ஜனாதிபதியின் கோரிக்கை மற்றும் நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்க அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விட்டுச் செல்லுங்கள் நாங்கள் செய்கிறோம் என பலர் கூறினர். மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அதன் பின்னர் அரசாங்கத்தை பொறுப்பேற்க மேலும் நிபந்தனைகளை விதித்தனர். இவர்களின் இந்த கதை அந்தரே என்ற விகடனின் கதை போன்றது.
ஒரு வெட்டவெளியில் ஒரு கருங்கல் பாறை இருந்ததாம். அதனை அப்புறப்படுத்த பலர் மிகவும் கஷ்டப்பட்டார்களாம். இறுதியில் எவருக்கும் அந்த கல்லை அப்புறப்படுத்த முடியவில்லையாம்.
அப்போது அங்கு அந்தரே என்ற விகடன் வந்து, நான் கல்லை அப்புறப்படுத்தி தருகிறேன் என்று கூறினாராம். ஆனால் தனக்கு மூன்று மாதங்களுக்கு கறுப்பு கோழி இறைச்சியும் குத்தரிசி சோறும் தேவை என சொன்னாராம்.
அந்த மூன்று மாதம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கி, கல்லை அப்புறப்படுத்தும் நாளும் வந்ததாம். அந்தரே வந்து கல்லை அப்புறப்படுத்த தயாராகியுள்ளார். இறுதியில் அந்தரே அந்த கருங்கல்லுக்கு அருகில் சென்று, அனைவரும் இணைந்து கல்லை தூக்கி தோளில் வைக்குமாறு கூறினாராம்.
அந்தரேவை போன்றவர்களே எமது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினர். நிபந்தனைகளை விதித்தனர். பிரதமர் விலகியதும் மேலும் சில நிபந்தனைகளை முன்வைத்தனர்.
அவர்களின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை காத்திருந்தால், இலங்கையை தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும்.
அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றால், அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கவேண்டிய மற்றைய அணி எதிர்க்கட்சி. எனினும் அழைப்பு விடுத்தும் பொறுப்பை அவர்கள் ஏற்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் மாத்திரமே உள்ளது. ஆனால், நாட்டுக்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கவில்லை.
நாங்கள் அந்த பொறுப்பை ஏற்றோம். பொறுப்பை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்களுக்கு தற்போது உண்மைகள் புரிய ஆரம்பித்துள்ளன” எனவும் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்