அநுர அரசாங்கத்தின் முக்கிய பதிலுக்காக காத்திருக்கும் நாட்டு மக்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பான விடயங்கள் அரசியல் பரப்புக்களில் பேசுபொருள்ளாகியுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேர்தல் பிரசார மேடையில் தெரிவித்த கருத்தை அடுத்தே இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை நாங்கள் எதிர்வரும் 21 திகதி உலகிற்கு அடையாளப்படுத்துவோம் என அநுர கூறியுள்ள நிலையில் அடுத்த 19 நாட்களும் இலங்கை மக்களுக்கு நீதி தொடர்பிலான முக்கிய எதிர்பார்ப்பு மிக்க நாட்களாக காணப்படுகின்றன.
எதிர்கட்சி தரப்பு
குழந்தைகள் உட்பட 277 பேரின் உயிரைப் பறித்த இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன? எனவும், தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருந்ததா? அரசியல் இருந்திருந்தால், அந்த அரசியல்வாதிகள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதா? தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை தகவல் கிடைத்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத பொறுப்பானவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று நாட்டு மக்கள் உட்பட சில அரசியல் தலைமைகளும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டினர், மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் எட்டு குண்டுவெடிப்பாளர்கள் உட்பட 277 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2019 ஆம் ஆண்டில், நாட்டை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்தது.
நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவான் விஜேவர்தனவும் ஆகியோர் பணியாற்றினர்.
இந்த ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னரான நாட்களிலும் ஆட்சிஅமைத்த அரசாங்கங்கள் இதற்கான தீர்வை வழங்காமலேயே இருந்துவந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு அன்று , கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், ஷாங்க்ரி-லா ஹோட்டல், கொழும்பின் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பரி ஹோட்டல், தி டிராபிகல் இன் ஹோட்டல் போன்ற இடங்களில் குண்டுகள் வெடித்தமை இலங்கை உட்பட உலக மக்களை சோகத்தில் ஆழ்த்திய நாளாகும்.
இவ்வாறான பின்னணியிலேயே, எதிர்வரும் 19 நாட்களும் மிகவும் முக்கியமான தினங்களாக பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குறித்து அண்மையில் கூறிய விடயங்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.
"ஏப்ரல் 21 க்கு முன்பு தாக்குதலுக்கு காரணமான கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை அம்பலப்படுத்துவோம் என்று நம்புகிறோம்.
ஏப்ரல் (21) க்கு முன்பு உறுதியான தீர்வு கிடைக்கும். விசாரணை முடிவுகள் இதனையே வெளிப்படுத்துகின்றன.
தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைகளின் முடிவுகள் வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும்.
இன்றும் ஊனமுற்றவர்களாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
