வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கு அரசாங்கம் முயற்சி
நெல் பறிமுதல் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன்,
சில தினங்களுக்கு முன்பாக இந்த மாவட்டத்தில் நெல் தொடர்பில் விவசாயிகள் முகங்கொடுக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேசியிருந்தேன்.நான் கூறிய விடயங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் வைத்திருக்கும் இடங்களை நுகர்வோர் அதிகார சபையினர் சீல் வைப்பது தொடர்பில் நான் கூறியிருந்தேன்.
இன்று அது விவசாயிகளை பாரியளவில் பாதிக்கும் வகையில் வந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் விவசாயத்தினை நம்பி வாழும் மக்கள்.இந்த மாவட்டம் விவசாயத்தினையும் மீன்பிடியையும் மையமாக வைத்து மக்கள் வாழும் மாவட்டம்.இந்த மாவட்டத்தில் முயற்சியாளர்களாக இந்த விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குள் அந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் வரும்.இன்று இலங்கை அரசாங்கம் தனது நிர்வாகத்தினை சரியான முறையில் செய்யாமல் தனது வேலைத்திட்டங்களை பொறுப்பற்ற வகையில் செய்து இலங்கை பொருளாதாரத்தினை முற்றாக அழித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கும் ஒரு செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.
இதைப்பற்றியெல்லாம் கதைப்பதற்கு முன்வராமல் இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் டிக்டொக் செய்து கடற்கரையோரத்தில் குளித்துக்கொண்டிருக்கின்றார்.இதுவொரு கவலையான விடயம். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் ஒரு ஏக்கரில் 50 தொடக்கம் 60மூடை வரையான நெல்லை பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளது.
ஒரு விவசாயி 10 ஏக்கர் விவசாயம் செய்தால் 500மூடைகள் வரும்.சிலவேளைகளில் அண்ணன்,தம்பிகள் இணைந்து 100 எக்கர் செய்தால்1000மூடை வரும். அரசியல் விலையினை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால் இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள்.அவர்களின் நெல்லை பறிமுதல் செய்யுங்கள்.அதனைவிடுத்து வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி விவசாயிகளின் நெல்லை பறிக்கின்றீர்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம்.
இந்த செயற்பாடு வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போவதில்லை.அவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்துவந்த தொழில்.இந்த நாட்டில் அரசின் விலையினை தீர்மானிக்கும் செயற்பாடுகளை விவசாயிகள் செய்யவில்லை.
இந்த விவசாயிகள் தங்களது நெல்லை வைத்து வேறு தொழில்கள் செய்யலாம்.இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்குள் விதை நெல்லை உற்பத்தி செய்ய முடியாதா எனக்கேட்டவர்கள் இன்று விதை நெல்லுக்காக வைத்திருந்த நெல்லைக்கூட பறித்துக்கொண்டு செல்கின்றார்கள் என்றால் இது எந்தவகையில் நியாயமானது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் இலங்கைக்கான பணிப்பாளருடன் கதைத்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து இது தொடர்பில் கூறியிருக்கின்றோம். தெற்கில் இலட்சக்கணக்கான மூடைகளை வைத்திருக்கும் பல நெல் ஆலைகள் அரசியல்வாதிகளிடம் உள்ளன.அதனையெல்லாம் விட்டுவிட்டு இங்குள்ள விவசாயிகளின் சீல்வைத்து எடுத்து அந்த நெல்லை இவ்வாறான அரசியல்வாதிகளின் நெல் ஆலைகளுக்குத்தான் குறைந்த விலையில் வழங்கப்போகின்றீர்கள் என்ற சந்தேகம் கூட எங்களிடம் உள்ளது.
உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் அட்டைகளைக் கொடுத்தே அரசி போன்ற பொருட்களை வாங்கவேண்டிய நிலையேற்படும்.எங்கள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை பறித்து எடுத்தால் அவர்களும் அந்த அட்டையுடனேயே திரியவேண்டிய நிலைவரும் என்றும் தெரிவித்துள்ளாரர்.