ரணில் மற்றும் சஜித் தரப்பு இணைந்து தேர்தலில் களமிறங்க இணக்கம்
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைவது நிச்சயம் என்றும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளன என்றும் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசு அதில் தோல்வியடைவது உறுதி. இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசு தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகின்றது.
ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசு எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பு.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கைகோர்க்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்துக்கு வந்துள்ளன. அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள்.
போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது என்பதால் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரண்டும் ஒரே அணியாக இணைந்து செயற்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam