யாழில் இந்திய மசாஜ் நிலையம் அமைக்க 20 ஏக்கர் அரச காணி.. கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்!
யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கடந்த 28 அன்று வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் எம்.பி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிரந்தர காணி
தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடமராட்சி, கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல் தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில் வடமராட்சி, கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும் அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.