யாழில் சிறுமியை கடத்தி கொடூர செயலில் ஈடுபட்ட நபர் தப்பியோட்டம்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற கைதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அவரை, சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் நீதிமன்ற உத்தரவு
குறித்த கைதியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் மறுநாள் சனிக்கிழமை (29) திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (31) மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததனை அடுத்து, இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.