போராட்டங்கள் நடத்தப்படுமானால் ஐந்தாவது கோவிட் அலையை தடுக்க முடியாது
நாட்டை மீண்டும் திறக்கும் போது, போராட்டங்கள் நடத்தப்படுமானால், ஐந்தாவது கோவிட் அலை உருவாகுவதை தடுக்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர், நளிந்த ஹேரத் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நாட்டை மீண்டும் திறந்த பின்னர், பொதுமக்கள், அரச மற்றும் பிற தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மிகுந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவிட் வைரஸ் இன்னும் சமூகத்தில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் கணிசமான எண்ணிக்கையிலான தொற்றுக்கள் பதிவாகின்றன என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது நாடு மீண்டும் திறக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே முன்னைய காலங்களை விட மக்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பேணுவது, முகக்கவசம் அணிவது மற்றும் எப்போதும் கைகளைக் கழுவுதல் போன்ற அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே, பாடசாலைகளை மீண்டும் திறப்பதை இலக்காகக் கொண்டு 5 வது கோவிட் அலையை கட்டுப்படுத்துவது கட்டாயமாகும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் சிலர் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஏதேனும் ஒரு வாய்ப்பினால் ஐந்தாவது கோவிட் அலை கட்டவிழ்த்து விடப்பட்டால், பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் எச்சரித்துள்ளார்.