புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பி சென்ற கொரோனா நோயாளி பிடிபட்டார்
புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பி சென்றிருந்த கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
புனானை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 43 வயதான ஷெல்டன் பிரேமரத்ன என்ற நோயாளியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் கொலன்னாவை, மீதொட்டமுல்ல பகுதியில் அமைந்துள்ள பேக்கரியொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் வைத்திய சிகிச்சைகளுக்கான வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானை சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் பொது மக்களின் உதவியுடன் தப்பிச் சென்றவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில் அவர் இன்றைய தினம் எஹெலியகொட, பல்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.