ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ராஜபக்ஷ அரசு ஒருபோதும் ஈடுபடாது!
நல்லாட்சி அரசைப் போல் எமது ராஜபக்ச அரசு ஜனநாயக விரோதச் செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
நுகர்வோர் விவகார சட்டங்களில் உள்ள குறிப்பாகத் தண்டப்பணம் உள்ளிட்ட விடயங்களைத் திருத்தங்களுக்கு உள்ளடக்கியிருக்கின்றோம். அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
எனினும், சில கறுப்பு வர்த்தகர்கள் செய்கின்ற நடவடிக்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் அவசியம். கத்தியால் பாண் வெட்ட முடியும்.அதேபோல் கழுத்தையும் வெட்ட முடியும். அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், அதனைச் செய்யமாட்டோம். அத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை நல்லாட்சி அரசு செய்ததுபோல நாம் செய்யமாட்டோம்.
இந்த நாட்டின் மக்களுக்கு நிவாரணமளிக்கையில் சட்டவிரோதமாகச் செயற்படுகின்ற வர்த்தகர்கள், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இந்த அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தோம்.
இந்தச் சட்டமானது தற்காலிகமானது.
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, டொலர் பிரச்சினை என்பவை மிக விரைவில் தீர்க்கப்பட்டு அவசரகாலச் சட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றார்.