உத்தேச மின்சார சபை சட்டமூல விவகாரம் : நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், ஒரு சரத்துக்கு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தேவை என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று (04.06.2024) சபையில் தெரிவித்துள்ளார்.
மனுக்கள் மீதான விசாரணை
இந்தநிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உத்தேச சட்டமூலம் திருத்தப்பட்டால் இந்த சரத்துகளை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது.
சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் உள்ளிட்ட 14 தரப்பினர் உட்பட மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை முடித்துக் கொண்ட உயர்நீதிமன்றம், மே 13ஆம் திகதி நாடாளுமன்ற சபாநாயகரிடம் தமது தீர்ப்பு இரகசியமாகத் தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |