கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் நகைச்சுவை கூட்டமாகவே இருந்தன! - சாணக்கியன்
அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாகக் காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், நகைச்சுவை கூட்டமுமாகவே மட்டக்களப்பில் கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தற்போதைய சமகால அரசியல் நிலைமைகள் குறித்தான மூன்று விடயங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து நாடுகளையும் நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்களின் கோவிட் உடலங்கள் குறித்தான கோரிக்கையை வைத்து இரு சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அரசு தன் அரசியலைச் செய்ய முற்படுகின்றமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.