புகையிரத சேவைகளில் ஏற்படும் தாமதம் ஜனவரி வரை தொடரும்
தற்போது தொடருந்து சேவைகளில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட தடங்கல்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடி
டொலர் நெருக்கடி காரணமாக தொடருந்து தண்டவாளங்களுக்கு தேவையான உபகரணங்கள், கருவிகள் மற்றும் கொங்கிறீட் கட்டைகள் என்பவற்றின் இறக்குமதியில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது அடிக்கடி தொடருந்து சேவைகள் ரத்துச் செய்யப்படுவதும், தாமதித்து பயணிப்பதும் வழக்கமாகியுள்ளது.
தென்னிலங்கைக்கான தொடருந்து சேவைகள் நடைபெறும் கடலோர தொடருந்து பாதைகளில் இந்த நிலை அதிகமாக காணப்படுகின்றது.
திருத்த வேலைகள்
தண்டவாளங்களில் கடல் உப்பு நீர் காரணமாக துருப்பிடித்தல் நிகழ்வுகள் அதிகளவில் ஏற்படுவதனால் தொடருந்துகளை மெதுவாகவே இயக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து பாதையின் திருத்த வேலைகளுக்காக அங்குள்ள கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகள் கழற்றப்படவுள்ளன.
அவற்றை தென்னிலங்கை தொடருந்து பாதையில் பொருத்தி தொடருந்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.