இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video)
இலங்கையில் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட நோய்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் மரண சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று பரவல் காணாமல்போன நிலையில், கொசுக்களால் ஏற்படும் டெங்கு, ஒட்டுண்ணியால் ஏற்படும் மலேரியா மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் தட்டம்மை நோய், நரம்பியல் நோய், இதய சம்பந்தமான நோய்கள், எலிக்காய்ச்சல், மன அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து 20 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வருடம் 41,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன், 25 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் மாகாணத்தில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் ஆய்வு ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், மனிதர்களாகிய எம்மை தாக்கும் 375 நோய்களில் 218-க்கும் அதிகமான நோய்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் என சுற்றுச்சூழல், சுகாதார விஞ்ஞானிகள் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை உயர்வு காரணமாகவே பல்வேறுபட்ட நோய்கள் தாக்குவதுடன், வெப்பநிலை உயர்வு, மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களின் ஆயுளை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
எதிர்பாராத பல ஆபத்துகள்
மேலும், மழை, வெள்ளப்பெருக்கு என்பவற்றால் கல்லீரல் அழற்சி (ஹெபிடைடிஸ்) நோயினை உண்டாக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றம் எதிர்பாராத பல ஆபத்துகளை உருவாக்கும். இதனால் சூழலுக்கு ஏற்றவாறு எளிதில் நம்மை மாற்றியமைப்பது இயலாத செயலாகும்.
நாட்டின் சுகாதார நெருக்கடிகளைத் தடுப்பதற்கு, காலநிலை ஆபத்துகளுடன் தொடர்புடைய மனித நோய்கள் குறித்து விரிவான புரிதல் அவசியம்.
இந்த காலநிலை மாற்றமானது, நோய்க்கிருமிகளின் தாக்கத்தினை அதிகரிப்பதுடன் நோய்க்கிருமிகளைச் சமாளிக்கும் உடலின் திறனையும் பலவீனப்படுத்துகிறது.
கொசுக்கள், வௌவால்கள், எலிகள் போன்றவற்றால் பரவும் நோய்களின் எண்ணிக்கையினை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது.
வெப்பம் அல்லது மழைப்பொழிவு
வளிமண்டல வெப்ப மயமாதல் காரணமாக 160 நோய்களும் அதிக மழை பொழிவு காரணமாக 122 நோய்களும் வெள்ளம் காரணமாக 121 நோய்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வாறு காலநிலை ஏற்படுத்தும் வெப்ப மயமாதல் அல்லது மழைப்பொழிவு மாற்றங்கள் கொசு உற்பத்தியினை அதிகரிக்கச் செய்கின்றது.
கடந்த பத்தாண்டுகளில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுத்திய புவியியல் தாக்கங்கள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
வெப்ப காலத்தில் பெரும்பாலான மக்கள் தண்ணீரில் அதிக நேரம் செலவிடுவர். இது நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றன.
நாம் வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நோய்க்கிருமி மற்றும் நோய் கடத்திகளுக்கான தொடர்பினையும் கடுமையான நோய்களை ஏற்படுத்துவதுடன், நோய்க்கிருமிகளின் திறனையும் காலநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்யும்.
தொற்றுநோய் கிருமிகளை
அதிக மழை அல்லது வெள்ளம் காரணமாகத் தேங்கி நிற்கும் நீா் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
இது மஞ்சள் காய்ச்சல், டெங்கு, மலேரியா, ஓரணு ஒட்டுண்ணி நோய் (லீஷ்மேனியாசிஸ்) போன்ற நோய்களின் பரவலுக்கு வழிவகுக்கும்.
சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு, தொற்றுநோய்க் கிருமிகளை வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக மாற்றக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகரித்து வரும் நாடளாவிய வெப்பநிலை, நோய்க்கிருமி அல்லாத பூஞ்சையினை பூசணத் தீங்குயிரியாகமாற்றியுள்ளது.
இதேபோல், கொழும்பு போன்ற நகர்ப்புற சூழலில் உருவாகும் பூஞ்சைகள் குளிர்ச்சியாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ளதை விட அதிக வெப்பம் தாங்கும் திறன் கொண்டவை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு காலநிலை மாற்றம் தொடர்பான ஆபத்துகள், மனித சரீரத்தின் திறனை இரு முக்கிய வழிகளில் பாதிக்கலாம்.
காலநிலை மாற்றம்
முதலாவதாக, பேரழிவும் அதனால் ஏற்படும் சேதமும் மக்களை ஒரே இடத்தில் மிகவும் நெரிசலான சூழ்நிலையில் வாழ வழி செய்யும். அத்துடன், சுகாதாரம் இல்லாத இந்த அபாயகரமான சூழலில் அவர்கள் எளிதில் நோய்க்கிருமி தாக்குதலுக்கு உள்ளாகலாம்.
இரண்டாவதாக, நாட்டில் ஏற்பட்டுள்ள ஊட்டச் சத்துக் குறைபாடு ஆகும். இதனால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கலாம்.
காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அதீத மன அழுத்தம் அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland) உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
பெரும் தாக்கம்
இவ்வாறு அழிவினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளைத் தவிர்க்கவும் காலநிலை மாற்றம் தொடர்பான இறப்புகளைத் தடுக்கவும் உலகம் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான குழு முடிவு செய்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சமூக, சுகாதார, பொருளாதார நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கப் புவி வெப்பமடைதலுக்குக் காரணமான பைங்குடில் வாயு (Greenhouse gas) உமிழ்வினை மனிதக்குலம் தவிர்க்க வேண்டியது இன்றியமையாதது.
இந்த காலநிலை மாற்றமானது இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் பல்வேறு தொற்றுநோய்களின் தாக்கம் 58 சத வீதம் அதிகரிக்கக்கூடும் எனவும் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறான காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் ஏற்படும் வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றமானது மக்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு நோய் ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
