ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட பரபரப்பு - வன்முறையாக மாறிய வாக்குவாதம்
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணி ஒருவரை கூரிய கம்பியினால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலை செய்த நபர் ரயில் பாதுகாப்பு சேவை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபர் குருநாகல், பமுனகொடுவா பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணலொன்றுக்காக பொல்கஹவெல செல்வதற்காக வெலிகம நிலையத்தில் இருந்து ரயிலில் பாதிக்கப்பட்ட நபர் ஏறியிருந்த நிலையில், சந்தேகநபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக சந்தேகநபர் அவரை ஸ்க்ரூடிரைவரால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் ரயில் கட்டுப்பாட்டாளர் காலி ரயில் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
காலி ரயில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.