பிரிகேடியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பொய்யானது - இராணுவம் அறிவிப்பு
பிரிகேடியர் அனில் சோமவீர பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த அதிகாரி இராணுவத் தலைமையகத்திற்கு வேறு கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது பிரிகேடியர் அனில் சோமவீர அங்கு பணியாற்றினார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு மறுப்பு
பிரதமர் அலுவலகத்திற்கு வந்த போராட்டக்காரர்களுக்கும் பிரிகேடியர் அனில் சோமவீரவுக்கும் இடையிலான உரையாடல் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது, இதன்போது அவர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போவதில்லையென குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கொழும்பு 112 படையணியின் தளபதியாக கடமையாற்றிய பிரிகேடியர் அனில் சோமவீர நேற்று முதல் அனைத்து கடமைகளில் இருந்தும் நீக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.




