தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை: சிவஞானம் கருத்து(Photos)
தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இன்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மங்கள விளக்கேற்றப்பட்டதுடன் புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தொடர்பிலான கருத்து
மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக்கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்ரமசிங்க செய்திருக்கின்றார்.
அந்தளவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.
இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றார்.
தமிழரசு கட்சியின் ஒற்றுமை
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும். எல்லோரையும் அணைத்து செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியை தொடர்வார்.
என்னைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களாவர்.
தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.