இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மற்றுமொரு பாரிய மாற்றம்
இலங்கையில் சமகால அரசியல் நெருக்கடி நிலையில் புதியதொரு மாற்றம் விரைவில் நிகழவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் மீண்டும் ஒன்றிணைந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என கட்சிக்குள் இருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் இது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் இது தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்க முடியும் என மத்தும பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் மாற்றம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கட்சியிலிருந்து விலகியவர்கள் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சஜித்தின் முடிவு
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என மற்றுமொரு உறுப்பினர் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ இணக்கம் வெளியிட்டுள்ளார். அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளாமல் ஆதரவு வழங்குவதாக அவர் தெரித்துள்ளார்.
நிதியமைச்சராக ஹர்ஷ
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹர்ஷ டீ சில்வா, சர்வகட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய சிம்மாசன உரையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் பயனுள்ள யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.