தாஜூதீனின் மரணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னாள் இலங்கை ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் மரணம் குறித்த விசாரணைகளை மீளவும் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாஜூதீனின் குடும்ப உறுப்பினர்களினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கடந்த 2012 மே மாதத்தில் சம்பவம் நிகழ்ந்தபோது, முதலில் குடும்பத்தினருக்கு அவர் கார் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதாக தாஜூதீனின் மாமானார் தெரிவித்துள்ளார்.
“நான் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அவர் பயணியர் இருக்கையில் இருந்தார். வாகனத்துக்கு சிறிய சேதமே இருந்தது. அத்தகைய விபத்தில் யாராவது உயிரிழப்பது அதிர்ச்சியாக இருந்தது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலத்தில் வெளியான ஆரம்ப அறிக்கையில், தாஜுதீன் அதிவேகமாக ஓட்டியதால் மற்றும் மதுவில் மயங்கி இருந்ததால் விபத்துக்குள்ளானார், பின்னர் தீப்பிடித்து புகை சுவாசித்ததால் மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏழு நீதிமன்ற மருத்துவர்களைக் கொண்ட குழு உடலை ஆய்வு செய்ததாகவும் அதன் போது தாஜுதீன் துன்புறுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கண்டறிந்தது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியான அறிக்கைக்கு முற்றிலும் முரண்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். “இந்த உண்மைகள் வெளிவந்த பிறகும் இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
இப்போது உள்ள அரசு நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்,” என தாஜூதீனின் மாமா வலியுறுத்தினார்.
நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் ஆனால் இந்த அரசும் எதையும் செய்யவில்லை என்றால், எதிர்காலத்திற்கே நம்பிக்கை இல்லை,” எனவும் தெரிவித்துள்ளார்.



