தையிட்டி காணி அளவீடு இன்று ஆரம்பம்
யாழ்.தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த நிலத்தை மீள ஒப்படைக்குமாறு கோரி நில உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நில அளவீட்டுப் பணிகள்
இது குறித்துக் கவனம் செலுத்திய அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் ஆகியோர், விகாரையைச் சூழவுள்ள பொதுமக்களின் நிலத்தை விடுவிப்பதற்கு ஏதுவாக நில அளவீடுகளை மேற்கொள்ளப் போவதாக உரிமையாளர்களிடம் உறுதியளித்திருந்தனர்.

இதற்கு முன்னதாக இக்காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த போது, அதற்கு விகாராதிபதி கடும் எதிர்ப்புத் தெரிவித்து அனுமதி மறுத்திருந்தார்.
இதன் காரணமாக நில அளவீட்டுப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தன. இந்த முறை நில அளவீட்டுப் பணிகளை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுப்பதற்காக, மாவட்ட நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து கொழும்பிலுள்ள நில அளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.
இரண்டு நாள்களாக இடம்பெறவுள்ள இந்த அளவீட்டுப் பணிகளின் ஊடாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்கள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri