பாகிஸ்தானில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்
பாகிஸ்தானில் முந்தைய ஜூலை மாதத்தைவிட 83 சதவீதம் அதிகமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 99 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
வடமேற்கு, தென்மேற்கு பகுதிகளில் இடைவிடாது அதிகரித்து வரும் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது அந்த நாட்டின் பிரபல சிந்தனை அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இஸ்லாமாபாத் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் (பிஐசிஎஸ்எஸ்)’ வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 99 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் அடங்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையிலான தாக்குதல் கடந்த மாதத்தில் நடந்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் தலிபான் எனப்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான்(டிடிபி)’ பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகக் கூறிய 147 தாக்குதல்களைவிட இந்த எண்ணிக்கை குறைவாகும்.
இராணுவ வீரா்களின் உயிரிழப்பு
இந்தத் தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 112 பேர் உயிரிழந்தனர்
மேலும், 87 பேர் காயமடைந்தனர். கடந்த ஜூலை மாதத்தில், 54 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், 83 சதவீதம் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த மாதத்தில் நடந்துள்ளன.
இதில் பலூசிஸ்தான் மற்றும் கைபர்பக்துன்கவா உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இராணுவ வீரா்களின் உயிரிழப்பும் கடந்த மாதத்தில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் பதில் நடவடிக்கைகளில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
