பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே நல்லிணக்கத்தின் முதல் படி! ஜீவன் தொண்டமான்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26.09.2022) கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் எம்.பி. கையொப்பமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டம்
அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது.
இதற்கமையவே சாணக்கியன் எம்.பி. விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன். இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வேண்டும். இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
பயங்கரவாத
தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து
வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம் கூட
சென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.