முகமூடி மனிதர்களால் ஜேர்மனியில் ஏற்பட்ட பதற்றம்.. இராணுவ அதிகாரி மீது துப்பாக்கி சூடு
ஜேர்மன் நகரமொன்றில் நிகழ்ந்த திடீர்க் குழப்பத்தின் விளைவாக பொலிசார் இராணுவ வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள மியூனிக் நகரில், முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று பதுங்குவதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிஸாரை நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட, பொலிஸார் திருப்பிச் சுட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இராணுவ அதிகாரி
இந்நிலையில், பொதுமக்கள் முகமூடிக் கொள்ளையர்கள் என நினைத்தவர்கள் உண்மையில் இராணுவ வீரர்கள்.

அதாவது, Marshal Power 2025 என்று பெயரிடப்பட்ட, 500 இராணுவ வீரர்கள், 300 பொலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பங்கேற்ற பெரிய அளவிலான ஒரு இராணுவ பயிற்சிக்கு இராணுவம் திட்டமிட்டிருந்திருக்கிறது.
ஆனால், அந்த ஆபரேஷன் குறித்து பொதுமக்களுக்கோ உள்ளூர் பொலிஸாருக்கோ எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
முகமூடி கொள்ளையர்கள்
ஆக, முகமூடி அணிந்த இராணுவ வீரர்களை பொதுமக்கள் கொள்ளையர்கள் என நினைத்து உள்ளூர் பொலிஸாரை அழைத்துள்ளனர்.

அவர்களைக் கண்ட முகமூடி அணிந்த இராணுவ வீரர்கள், இதுவும் ஆபரேஷனின் ஒரு பாகம் என நினைத்து அவர்களை நோக்கி வெற்று குண்டுகளால் சுட்டுள்ளனர்.
தங்களை நோக்கி முகமூடி அணிந்தவர்கள் சுட்டதால் பொலிஸார் உண்மையாகவே அவர்களை நோக்கிச் சுட, ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
ஆகமொத்தத்தில் இராணுவ வீரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட, மக்கள் அதிர்ச்சியடைய, அந்த பகுதியில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.