கடவுச்சீட்டு அலுவலகம் அருகில் பதற்றம்
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13.2.2024) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியாததால் மக்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீண்ட வரிசைகள்
குடிவரவு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய காரியாலயத்திற்கு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக நாளாந்தம் ஏராளமானோர் வருகின்றனர். இந்த அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 150 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
எனினும் கடவுச்சீட்டு வழங்குவதற்கான முறையான முறைமை இல்லாததால் அங்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த அலுவலகம் அருகே பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மக்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக இந்த அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இரவைக் கழிக்க வேண்டியுள்ளது.
பல நாட்களாக அங்கு தங்கியிருந்த மக்கள் இன்று காலை கூட கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியாததால், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
குடிவரவு திணைக்களம் குறிப்பிட்ட இலக்கத்தை வழங்கிய போதிலும், அந்த இலக்க வரிசையில் கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |