தனது பிரித்தானிய குடியுரிமை உண்மையை மறைத்த இராஜாங்க அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரித்தானிய குடியுரிமையின் உண்மையை மறைத்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக சட்டத்தரணி ஹபீல் ஃபாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரித்தானிய குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செயற்பாட்டாளர் ஓசல ஹேரத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
நீதியரசர்கள் காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பல தடவைகள் விஜயம்
இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹபீல் ஃபாரிஸ், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு சட்டப்பூர்வ இலங்கை பிரஜாவுரிமை இல்லை எனவும், அவர் வதிவிட விசாவைப் பயன்படுத்தி இலங்கையில் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரித்தானிய குடியுரிமையின் உண்மையை மறைத்து, இலங்கை கடவுச்சீட்டையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் இராஜாங்க அமைச்சர் தமது வதிவிட மற்றும் வருகை வீசாவைப் பயன்படுத்தி இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனினும் இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஆட்சேபனைகளை தெரிவித்தார்.
தனது ஆட்சேபனைகள் மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். இந்தநிலையில் குறித்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |