லண்டனில் ஒரே நாளில் எதிரெதிர் கொள்கைகளுக்காக பேரணி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
லண்டனில் இன்றையதினம் (26.10.2024) புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரி மற்றும் இனவெறுப்பை எதிர்க்கும் இடதுசாரி ஆகிய அமைப்புக்கள் ஒரே நாளில் பேரணி நடாத்த திட்டமிட்டுள்ளதால் அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்தல் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு லண்டனின் விக்டோரியா ரயில் நிலையத்தில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் இனவெறுப்பு எதிர்ப்பு அமைப்பு மற்றும் வர்த்தக யூனியன்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.
இவ்வாறு ஒரே நாளில் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படலாம் என கூறப்படுவதோடு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியவில் வன்முறை
அத்துடன், மத்திய லண்டனில் இன்றையதினம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய பொலிஸ் இணை ஆணையரான ரெச்சல் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாத இறுதியில் சௌத்போர்ட் பகுதியில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டமைக்கு புலம்பெயர்ந்த ஒருவரே காரணம் என தவறான தகவல் பரவிய நிலையில், பிரித்தானியாவில் வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, புகலிடக் கோரிக்கையாளர்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 1,500 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |