அனுமதியின்றி பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸாரால் குழப்பம் (Photos)
மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் இன்று காலை பதற்றமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் ஊர் மக்களாலும், பாடசாலை பழைய மாணவர்களாலும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அதன்போது சில ஆசிரியர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் ஆசிரியர்களை அச்சுறுத்தியதன் காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (Sivanesathurai Chandrakanthan) எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன் பிரதிபலிப்பாக இன்றைய தினம் குறித்த போராட்டத்தை நடத்திய சில ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மிகவும் சிறந்த ஆசிரியர்கள் சிவானந்தா பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.தங்களது கல்வி நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கையை புறக்கணித்த போது யாருடைய அனுமதியும் இன்றி காத்தான்குடி வீதி போக்குவரத்து பொலிஸார் மாணவர்களை அடக்க முற்பட்ட போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் தங்களது உரிமை சார்ந்த விடயங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் போராடும் போது இவ்வாறான அரசியல் பழிவாங்கல் காரணமாக நல்ல ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர்கள் இன்றைய தினம் கல்வி நடவடிக்கையை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.



