அரச வாகனங்களின் கேள்விப்பத்திர விற்பனை அறிக்கைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
2025 மே 15 அன்று நடைபெற்ற அரச வாகனங்களின் கேள்விப்பத்திர அடிப்படையிலான விற்பனை தொடர்பான சமூக ஊடக மற்றும் ஊடக அறிக்கைகள் தவறானவை என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விற்பனை வெளிப்படையாக நடத்தப்பட்டதாகவும், ஏப்ரல் 23 அன்று செய்தித்தாள்கள் மூலம் திறந்த அரச கேள்விப்பத்திர செயல்முறை அறிவிக்கப்பட்டதாகவும் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மொத்தம் 108 ஏலதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்தனர், மேலும் மே 15 அன்று முற்பகல் 11:00 மணிக்கு கேள்விப்பத்திரங்கள் பொதுவில் திறக்கப்பட்டன.
அதிக விலை
விற்பனைக்கு விடப்பட்டிருந்த 26 வாகனங்களில், 17 வாகனங்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை விட அதிக விலைக்கு ஏலம் எடுத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
எந்தவொரு ஏலமும் குறைந்தபட்ச மதிப்பீட்டை எட்டாததால் ஒன்பது வாகனங்கள் விற்கப்படவில்லை. விற்பனையிலிருந்து ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 200.1 மில்லியன் ரூபாய்கள் ஆகும், இது 155.9 மில்லியன் ரூபாய்கள் என்ற மதிப்பிடப்பட்ட மதிப்பை விட அதிகமாகும்.
எனினும், ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினர், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களைப் பயன்படுத்தி, அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதாக ஜனாதிபதி அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில், தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
