அமெரிக்காவிற்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன – ஈரான் மிரட்டல்
அமெரிக்காவிற்கு எதிராக தாம் முழுமையாக தயாராக உள்ளதாகவும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போர் ஒன்பதாவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி சமூக ஊடகமான X-இல் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் அணு நிலையங்களை குறிவைத்து திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரான் முழுமையாக தயாராக உள்ளது.

எங்களிடமும் பல ஆச்சரியங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய போர் சூழலில் மிகவும் கடினமாக இருக்கும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட அதிகாரியான அலி லாரிஜானி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் தொடங்கிய போரின் மத்தியில் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை நிலைநிறுத்துவது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோதலில் கூடுதல் நாடுகள் இணைந்தால் அபாயம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரான், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பிரான்ஸ் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
உலகளாவிய எண்ணெய் கடத்தலின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி கடந்து செல்லும் முக்கிய இடமாக ஹோர்மூஸ் நீரிணை கருதப்படுகிறது. மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளதால் உலக எண்ணெய் சந்தையிலும் பதற்றம் நிலவுகிறது.
திங்கட்கிழமை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலலரை கடந்துள்ள நிலையில், மோதல் நீடித்தால் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.