நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
மலையகம்
நாட்டில் கோவிட் தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (25) வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சென்று கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்.
இருந்த போதிலும் அதிபர், ஆசிரியர்கள் கடந்த 24 வருடங்களுக்கு மேலாக எதிர்கொண்டு வரும் சம்பள முறன்பாட்டை தீர்க்க கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (25) திங்கட்கிழமை வழமையாக பணிக்கு சென்ற ஆசிரியர்கள் மதியம் 02 மணியுடன் பாடசாலை நேரம் முடிந்த பின் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் தமது சம்பள முரன்பாட்டை தீர்க்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வீதியில் இறங்கி மேலும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் மலையகத்தில் நுவரெலியா, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கினிகத்தேனை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம, வலப்பனை, இராகலை போன்ற பகுதிகளிலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் போது பாடசாலைகளை சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷமிட்டு தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், 24வருட காலமாக நிலவிவரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுதருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, இலங்கையின் ஆசிரியர் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் பாதுகாக்க இந்த நாட்டின் அதிகாரிகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் எனவும் 1997மற்றும் 2006ஆகிய வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திட்டத்தை அமுல்படுத்தப்படாமையை கண்டித்தும் அதிபர், ஆசிரியர் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமை, கொவிட் 19 குறித்து முழுமையான வசதிகள் பாடசாலைகளுக்கு செய்துக்கொடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி
பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு
சம்பள முரண்பாட்டினை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய ஆசிரியர்கள், அதிபர்கள் ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் ஆசிரியர்களின் 24வருட சம்பள முரண்பாட்டினை நீக்கு, பிள்ளைகளின் கல்வி உரிமையினை உறுதிப்படுத்து, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்தினை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அழுத்தத்தினை கொடுக்காதே உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.
திருகோணமலை
கிழக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலையில் இடம் பெற்றது.
இன்று (25) பிற்பகல் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக அதிபர் ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கல்விக்காக 6 வீத நிதியினை ஒதுக்கீடு செய், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை கிழித்தெறி, ஆசிரியர் அதிபர் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, மற்றும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிபடுத்து என பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம்
அதிபர், ஆசிரியர்கள் ஆறு கோரிக்கையை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையில் முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே மதியம் 1.45 மணியளவில் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஒன்று கூடிய அதிபர் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணப்பட வேண்டும், இலவசக்கல்வியை பறிக்காதே, கல்விக்காக ஆறு வீத ஒதுக்கீடு வேண்டும், இலவசக்கல்வி பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி இராணுவமயப்படுத்துவதை நீக்கவேண்டும் உட்பட பல கோசங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி இருந்தனர்.
பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை மாணவர்களின் நலனுக்காக கைவிட்டு பல்வேறு புதிய
வழிமுறைகளை கையாண்டு போராட்டம் நடக்குமென அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்
நேற்று எச்சரித்த நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.










