மாணவர்களின் கருத்துக்களோடு முரண்படும் வடக்கின் ஆசிரியர்கள்
வடக்கின் கல்வி நிலை தொடர்பில் திறமையான பல மாணவர்கள் எதிர்கொண்டு வந்த சவால்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகள் திடுக்கிடும் படியான முடிவுகளைத் தந்துள்ளன.
வடக்கின் கல்வி அடைவு மட்டங்கள் தொடர்பில் அவை பலமான சந்தேகங்களை ஏற்படுத்திவிடும் அபாயகரமான சூழலையும் தோற்றுவிக்கின்றன.
திறமையான செயற்பாடுகள் என்பவை பயனுடைய ஆரோக்கியமான விளைவுகளைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
அப்படியல்லாத எந்தவொரு திறமையான செயற்பாட்டையும் உருவாக்கிவிடும் வகையில் கல்வித் திட்டங்கள் அமையுமெனின் அவை திருத்தப்பட வேண்டியவை என்பது திண்ணம்.
வகுப்பறைச் செயற்பாட்டில் வெளிக்காட்டப்படும் திறமைகளுக்கு எதிர்மாறான திறன் முடிவுகளை தேசிய பரீட்சைகளில் பெறக்கூடிய சூழல் ஒவ்வொரு பரீட்சை முடிவுகள் வெளியாகும் போதும் நிகழ்வதை அவதானிக்க முடிகின்றது.
இது ஏன் என இதுவரையிலும் கல்வியாளர்கள் ஆராய முயலாதது அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடாக அமைகிறது.அல்லது போலியான திறன் முடிவுகளை வெளிப்படுத்துவதன் ஊடாக தாங்கள் திறமையான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதாக காட்டிக்கொண்டு அதில் அவர்கள் மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதாக கருத வேண்டிய சூழலை தந்து நிற்கின்றது அவர்களது செயற்பாடுகள்.
இரு சாராரும் இரு எடுகோள்களும்
பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மற்றும் கற்பித்தலில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் என இரு சாரார்களூக்கூடாகவும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த தகவல்கள் மூலம் மேற்கொண்ட ஒப்பீடு மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் தெளிவான முறைமாறல்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.
தரம் 11 மாணவர்களும் அவர்களது தேசிய பரீட்சையான கல்விப் பொதுத்தராதர (சா/த) பரீட்சையும் ஒரு எடுகோளாக கொள்ளப்பட்டது.
மற்றொரு பரிசோதனை முயற்சியில் உயர்தர மாணவர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரதான தேசிய பரீட்சையான கல்விப் பொதுத்தராதர (உ/த) பரீட்சையும் எடுகோளாக எடுத்தாளப்பட்டன.
இரு எடுகோள்களையும் கொண்டு இரு வேறு பரிசோதனைகளாக இது மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முடிவுகளும் முடிவுகளுக்கான தகவல்களும் அத்தகவல்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு முறைகளும் இரு பரிசோதனை முயற்சிகளிலும் ஒருமித்தும் வெவ்வேறாகவும் பரிசோதிக்கப்பட்டன.
இரு பரிசோதனைகளும் ஒரேமாதிரியான முடிவுகளை தந்துள்ளன.அத்தோடு அவை மீண்டும் மீண்டும் வெவ்வேறு சூழல்களில் ஒரே முறையில் தகவல்கள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போதும் முடிவுகளில் மாற்றங்கள் இல்லை.
அவதானிப்பும் நால்வகை மாணவரும்
ஒவ்வொரு தேசிய பரீட்சை முடிவுகள் வெளியாகும் போதும் மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் உணர்வு மாற்றங்களை உற்று நோக்கியதன் மூலமே இந்த ஆய்வுக்கான தூண்டல் பெறப்பட்டது.
சில மாணவர்கள் அவர்கள் பெற்றுக்கொண்ட பரீட்சை முடிவுகளுக்காக அவர்களது பெற்றோராலும் ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டு அவர்களது திறமையான பரீட்சை முடிவுகள் மெச்சப்பட்டன.
இன்னும் சில மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற பரீட்சை முடிவுகளிலும் திறன்கூடிய முடிவுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களை சுட்டிக்காட்டி அவர்களது பரீட்சை முடிவுகளோடு இவர்களது பரீட்சை முடிவுகளை ஒப்பிட்டு திட்டித் தீர்ப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இந்த மாணவர்கள் வகுப்பறைகளில் வெளிக்காட்டிய திறன்கள் மீது சந்தேகங்களை எழுப்பியதோடு அந்த வகுப்பறைத்திறன் மதிப்பீட்டை செய்த ஆசிரியர்கள் இவர்களுக்காக பக்கச்சார்பாக இயங்கியிருந்தார்களோ என்ற சந்தேகத்தையும் பெற்றோர்கள் ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
இங்கே என்னதான் நடக்கின்றது? எப்படி இவ்வாறான இரு வேறு புறச்சூழலை பரீட்சை முடிவுகளால் ஏற்படுத்த முடிகின்றது? இங்கே யார் தவறிழைக்கின்றனர்? என்ற வினாக்களே இந்த ஆய்வின் கருதுகோள்களை உருவாக்க உதவியிருந்தன.
இவ் இரட்டை அவதானிப்புகளின் தூண்டலால் மாணவர்களை நான்கு பிரிவினுள் தெரிந்தெடுக்க முடிந்தது.
வகுப்பறையில் திறமையான திறன்வெளிப்பாடுகளை வெளிக்காட்டியபடியே தாங்கள் எதிர் கொண்டிருந்த தேசிய பரீட்சை முடிவுகளையும் திறமையானதாக பெற்றுக் கொண்டவர்கள் முதலாவது பிரிவினராக அமைகின்றனர்.
வகுப்பறைகளில் திறமையான வெளிப்படுத்தல்களைக் கொண்டிருந்த போதும் தாங்கள் எதிர் கொண்டிருந்த தேசிய பரீட்சை முடிவுகளில் திறமையான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்கள் இரண்டாவது பிரிவினராக அமைகின்றனர்.
வகுப்பறைகளில் அதிக திறன் வெளிப்பாடுகளை வெளிக்காட்டாத போதும் தாங்கள் எதிர் கொண்டிருந்த தேசிய பரீட்சை முடிவுகளில் அதிக திறமையான பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மூன்றாவது பிரிவினராக அமைகின்றனர்.
வகுப்பறைகளில் அதிக திறன் வெளிப்பாட்டை வெளிக்காட்டதவாறே தாங்கள் எதிர் கொண்டிருந்த தேசிய பரீட்சைகளிலும் அதிக திறன் வெளிப்பாட்டைக் காட்டாத மாணவர்கள் நான்காவது பிரிவினராக அமைகின்றனர்.
எதிர்மாறான முடிவுகள் ஏன்?
முதல் மற்றும் இரண்டாவது பிரிவினர்களையும் அவர்களுடன் நான்காவது பிரிவினரையும் புறம் தள்ளி விட்டு மூன்றாவது பிரிவினரை மட்டும் இங்கே கருதும் போது மேற்சொன்ன மாணவர்களின் கருத்துக்களோடு ஆசிரியர்கள் முரண்பட்டு நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
முன்றாவது பிரிவினுள் அடங்கும் மாணவர்களிடையே மேற்கொண்ட புலனாய்வு முயற்சியின் பலனாக அவர்கள் தேசிய பரீட்சையை எழுதிய பரீட்சை நிலையத்தினுள் பரீட்சை எழுதிய மாணவர்களின் நடத்தைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அந்த தகவல்கள் மூன்றாம் பிரிவு மாணவர்களின் பரீட்சை முடிவுகள் தொடர்பாக எழுப்பப்படும் இது எப்படிச் சாத்தியம்?யார் தவறிழைத்து? என்ற வினாக்களுக்கு விடையினைத் தந்திருந்தன.
பரீட்சை மண்டபங்களில் உள்ள கட்டுப்பாட்டு தளர்வுகளைப் பயன்படுத்தி பரீட்சையின் போது வினாத்தாள்களுக்கு விடையளிப்பதற்காக அவ் மாணவர்கள் உதவிகளை பெற்றிருக்கின்றனர்.
இந்த உதவி மாணவருக்கு மாணவர் என்ற முறையிலும் மாணவருக்கு பரீட்சை மண்டபங்களில் நிற்கும் ஆசிரியர்கள் (பரீட்சை மேற்பார்வையாளர்கள்) என்ற முறையிலும் அமைந்திருந்தது.
இது சாத்தியமற்றது என்று கோணத்தில் தகவல்கள் மீண்டும் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.அடுத்தடுத்த முறைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே புலன்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அப்போதும் ஆரம்பத்தில் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களினை உறுதிப்படுத்தும் வண்ணம் அவை அமைந்திருந்தன.
எனினும் மூன்றாம் பிரிவு மாணவர்கள் தொடர்பில் அவர்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களிடம் இந்த தகவல்களை சாடையாக சுட்டிக்காட்டிய போது ஆசிரியர்கள் தங்கள் மறுப்பினைத் தெரிவித்திருந்தனர்.
பரீட்சை மண்டபங்களில் மாணவர்கள் பார்த்து எழுத சந்தர்ப்பங்கள் இல்லை என அவர்கள் வாதிடுவதும் நோக்கத்தக்கது.
எது எவ்வாறாயினும் பெறப்பட்ட தகவல்கள் ஆசிரியர்களின் கருத்துக்களோடு முரண்பாட்டு நிற்கின்றன.
உத்தியோகப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலமே இதன் பொருத்தப்பாடான உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.
துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பார்களா? என்பது சந்தேகமே!
சில எடுத்துக்காட்டுகள்
இந்த செய்திக் கட்டுரையினை படிக்கும் வாசகர்களின் திருப்திக்காக பெறப்பட்ட சில தகவல்களில் இருந்து சில சொற்றொடர்களை, அவை சார்ந்த சில நிகழ்வுகளை விமர்சிக்கலாம்.இவை அனைத்தும் புலனாய்வு தகவல் சேகரிப்பு முறையில் பெறப்பட்டவை என்பதையும் சுட்டிக் காட்டல் பொருத்தமானதாகும்.
"நான் இருந்து பரீட்சை எழுதிய இடம் பரீட்சை மேற்பார்வையாளர்களால் இலகுவாக அவதானிக்க முடியாது.நான் இருந்த மண்டபத்தில் என்னுடன் சில மாணவர்களே இருந்தனர்.புத்தகங்களை வைத்து பார்த்து எழுதுவதற்கு வசதியாக இருந்ததால் அந்த மண்டபத்தில் இருந்த எல்லோருமே பார்த்துத்தான் எழுதியிருந்தோம்." என ஒரு பரீட்சை மண்டபத்தில் நடந்த நிகழ்வு தொடர்பில் ஒரு மாணவர் தன் சகபாடிகளோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.
அந்த மாணவர்கள் படித்த பாடசாலையிலேயே பரீட்சை மண்டபம் இருந்ததால் அவர்களுக்கு இது சாத்தியமாகியிருக்கும் என சில ஆசிரியர்களிடம் இது தொடர்பில் மேற்கொண்ட கேட்டலின் போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
"வகுப்பில் படிக்கவே மாட்டாத அவனெல்லாம் எப்படிச் சித்தி பெற்றான்.என்ற ஆசிரியரின் கேள்விக்கு எல்லோருமே பார்த்துத் தானே எழுதியிருந்தார்கள்.பிறகெப்படி குறைந்த பெறுபேறுகளை பெறுவார்கள்?" இந்த உரையாடல் நடந்து முடிந்த க.பொ.த (சா/த) மாணவர்களின் பரீட்சை முடிவுகள் வெளியாகி பரபரப்பாகி இருந்த ஒரு சூழலில் அது தொடர்பில் தரம் 10 மாணவர்களோடு நடந்த உரையாடலாக இருக்கின்றது.
மற்றொரு பாடசாலையில் மாணவர்கள் தேசிய பரீட்சைகளில் பார்த்து எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட போது அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் "மாணவர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பரீட்சை எழுதியிருந்தார்கள்." என பேசியிருந்தார்கள்.
தரம் 11 மாணவர்களிடையே நடைபெறும் தவணைப்பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் ஒரு மாணவன் தன் பெற்றோரிடம் கூறிய கருத்துக்கள் அப்பாடசாலையில் மாணவர்களிடையே உள்ள பழக்கத்தை சிறப்பாக எடுத்துரைப்பதாக இருக்கின்றது.
தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்திருந்த மாணவர் ஒருவர் பெற்றோரின் விருப்பத்திற்கமைய கிராமிய பாடசாலை ஒன்றிற்கு இடமாற்றமாகிச் செல்கின்றார்.
அங்கு வகுப்பில் நடைபெறும் தவணைப் பரீட்சைகளில் மாணவர்கள் எல்லோரும் புத்தகங்களை, பயிற்சிக்கொப்பிகளை பார்த்து பரீட்சை வினாத்தாளுக்கு விடையளிப்பதை அவதானிக்கின்றார். இது தொடர்பில் அந்த மாணவர் தன் பெற்றோரிடம் எடுத்துரைத்த போது "நீ பார்க்காது எழுது.அது போதும்.அவர்களை ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ளட்டும்." என்று பதிலளிக்கப்படவே இரண்டாண்டுகள் இவ்வாறே கடந்து சென்றுள்ளது.
அந்த மாணவர் தரம் 11 இற்கு சென்ற போது தவணைப்பரீட்சை பெறுபேறுகளை பெற்றோரிடம் எடுத்துரைத்து மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் பற்றி ஆசிரியர்கள் கலந்துரையாடும் சூழல் தோன்றுகின்றது.
இப்போது மாணவர்கள் பார்த்து எழுதும் பழக்கத்தின் தன் அவதானத்தினை பாடசாலை அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்ல அந்த மாணவருக்கு பெற்றோர் காட்டிய வழிகாட்டலில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட, நிலைமையை பாடசாலை நிர்வாகம் அறிந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
தேசிய பாடசாலை ஒன்றில் உயர்தர உயிரியல் பிரிவில் வகுப்பறை பரீட்சைகளில் மாணவர்கள் பாடக் குறிப்புக்களை பார்த்து பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிப்பதாகவும் ஒரு குறிப்பு பெறப்பட்டிருந்தது.
பரீட்சை மண்டபங்களில் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைமரணான செயற்பாடுகள் நடைபெற்றிருந்ததாக தகவல்கள் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கைகள் தேவை
எவ்வாறாயினும் இந்த ஆய்வானது ஒரு மாதிரி முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை ஒரு முன்தகவலாக கொண்டு இங்கு சுட்டிக்காட்டப்பட்ட நிகழ்வுகள் தொடர்பில் கல்வித்துறையினர் பொருத்தப்பாடான ஆய்வுக்கு முன்வர வேண்டும்.
அதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி கல்வித்துறையை சீர் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உண்மை நிலையினை இனம் கண்டு அவை சீர் செய்யப்பட வேண்டும். அவ்வாறல்லாதவிடத்து சுட்டிக்காட்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருமாயின் உண்மையிலேயே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் திறன் வெளிப்பாடுகள் மீது சந்தேகங்களை தோற்றுவிக்கும்.
அது ஆரோக்கியமான கல்வி அடைவு மட்டங்களைப் பெற்றுக்கொள்வதை பாதிப்பதோடு முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி முயற்சிகளை வீணடிப்பதாகவும் அமைந்துவிடும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |