கோட்டாபய செய்ததையே அநுரகுமாரவும் செய்வதாக அளுத்கமகே கடுமையான விமர்சனம்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், அவரும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 993 வாகனங்களை ஏனைய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளித்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் குறைத்து, பால் தேநீருக்குப் பதிலாக சாதாரண தேநீரை வழங்கினார், ஜனாதிபதி மாளிகைக்குப் பதிலாக சிறிய வீடொன்றில் தங்கியிருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கூட்டணி
மக்களின் அதிக எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும், அவ்வாறான அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதுவே நேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சகலருடனும் இணைந்து விரிவான எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |