மோசடி தொடர்பில் ஆதாரத்துடன் சிக்கிய சில அரச அதிகாரிகள் - அநுர தரப்பு தகவல்
கலால் திணைக்களத்தில் சில அதிகாரிகளால் பாரியளவில் ஊழல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
மதுபானசாலை அனுமதி வழங்குவதற்காக திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகள் 20 மில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடியான முறையில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தம்மிடம் ஆதாரங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள்
இந்த ஊழல் பேரங்கள் காரணமாக அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த கலால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மதுபான போத்தல் மோசடியில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டிய கலால் திணைக்கள அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மது அனுமதி பத்திரங்கள்
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக அதிகளவான மது அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என, மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கு இணங்க 172 மது உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.