ஐ எம் எப் இன் அறிவுறுத்தலின்படியே வரி விதிப்பு - சித்தார்த்தன் (Video)
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படியே தற்போதைய வரி விதிப்புகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வருமானவரி விதிப்பு வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் இன்று (14.10.2022) யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
மேலும் கூறுகையில், “நேற்றையதினம் அரசாங்கம் ஒரு பிரத்தியேக வரத்தமானி மூலம் 3 இலட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்த வருமான வரியை ஒரு இலட்சமாக மாற்றி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது.
அதாவது கடந்த காலங்களில் மூன்று இலட்சம் ரூபா வரையும் வரி கிடையாது. ஆனால் தற்போது வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலின்படி ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் என்றால் வரி அறவிடப்படும்.
இப்படியாக பார்க்கும் போது இவ்வாறான வரிவிதிப்பு நடுத்தர வர்க்க மக்களைத்தான் கூடுதலாக பாதிக்கும். ஏனென்றால் அவர்கள்தான் இந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்தினை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
அரச உத்தியோகத்தர்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நடுத்தர வர்க்கம்
ஏற்கனவே அவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே செல்கின்ற நிலையில்தான் இருக்கின்றார்கள். அவர்களுடைய நிலைப்பாடு மிகவும் மோசமான நிலையில் தான் காணப்படுகின்றது என நான் கருதுகின்றேன்.
நிச்சயமாக வரிகள் கூட்டப்பட வேண்டும். ஆனால் அது மேல் மட்டங்களில் இருப்பவர்களிடமும், இன்றும் வரி செலுத்தாது ஏமாற்றிக்கொண்டு இருப்பவர்களிடமுமே அறவிடப்பட வேண்டும்.
இவ்வாறு வரிகளை உயர்த்துவதன் மூலம் சாதாரண பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
இதை அரசாங்கம் சரியாக உணர்ந்து முன்னேற்றகரமாக சமூகத்தை கொண்டு செல்லக்கூடிய
வகையிலான வரிகளை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.



