இலங்கையிலிருந்து தன்சானியாவுக்கு போதைப்பொருள் கடத்தல் : வெளிவந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள்
இலங்கையில் இருந்து தன்சானியாவுக்கு அனுப்பப்பட்ட 11 டொன் போதை பொருட்களுடன் ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரசன்ன மந்துமகே வெல்லால மற்றும் சந்தோஷ் ருமிந்த ஹேவகே 25 - 45 வயதானவர்களாவர். ஏனையவர்கள் தன்சானியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அதனூடாக இலங்கை குற்றங்கள் விசாரணைகள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரிய வகையைச் சேர்ந்த போதைப்பொருள்
இலங்கையில் இருந்து பசளை வகைகளை தன்சானியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று பசளை கொள்கலனில் மறைத்து இந்த 11 டொன் போதைப்பொருளை அனுப்பியுள்ளது.
தன்சானியா ஔடத கட்டுப்பாடு மற்றும் அமுலாக்கல் அதிகாரசபை(Drug Control and Enforcement Authority - DCEA) மேற்கொண்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
756 பைகளில் இவை பசளை போல் பொதி செய்யப்பட்டிருந்துள்ளது.18,485.6 கிலோ கிராம்களை கொண்ட 'மெட்ரஜினா ஸ்பெசியோசா' (mitragyna speciosa) என்ற போதை பொருளாகும்.

இது இலங்கையில் இதுவரை பாவிக்கப்படாத மற்றும் கண்டுபிடிக்கப்படாதவையாகும். இது மிகவும் அரிதான போதைப் பொருளாகும். இந்தோனேஷியா- காம்போஜி - தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலமானதாகும்.
இந்த போதைப்பொருள் கொகேய்ன் வகையை சேர்ந்ததாகும். இதை பாவித்தால் அதிகமான மனநிலை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். அத்தோடு சீக்கிரம் அடிமையாகும் தன்மையைக் கொண்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பல வகைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அவதானம் வெளியிடப்பட்டுள்ளது.