தமிழர்களின் பலவீனத்தை பயன்படுத்தும் இலங்கை இந்திய அரசுகள்! எழுந்துள்ள கண்டனம்
தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு வாய்ப்பாக மாறியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugathas) தெரிவித்துள்ளார்.
அவரால் இன்றையதினம் (21.06.2024) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்றதன் பின்னர் அரசாங்கத்தின் அயல் உறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ முதற் பயணமாக இலங்கை வந்து அனைத்து தரப்புக்களையும் சந்தித்துள்ளார்.
தவறிய தமிழர் தரப்பு
தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை. மாறாக ஜெய்சங்கருடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக தெரிவிக்க தமிழர் தரப்பு தவறியுள்ளது.
ஜெய்சங்கர் முன்னிலையில் ஒரே கட்சிக்காரர் முரண்பட்ட கருத்து விவாதத்தில் ஈடுபட்டதுடன் பிறிதொரு கட்சி 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தேவையில்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பெரும்பான்மை ஆட்சியாளரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு வியூகங்களை வகுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பின் பலவீனம் வாய்ப்பாகவும் இரண்டாம் தரப்பின் நெருக்கடிகள் இன்றி இலங்கை அரசை நேரடியாக கையாள வழியையும் சமைத்துள்ளது.
தமிழர் பிரதிநிதிகள்
சம நேரத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் அழுத்தங்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பின் நெருக்கடிகள் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது.
கடந்தகால தமிழர் தரப்பின் இராஐதந்திர பலவீனத்தை கற்றுக் கொண்ட பாடமாக விளங்கி இலங்கை, இந்திய தரப்புக்களை தந்திரோபாய ரீதியில் கையாள தமிழர் பிரதிநிதிகள் ஒற்றுமையின்மையால் பலவீனப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலை எதிர்காலத்தில் எஞ்சியுள்ள தமிழர் இருப்புக்களை யுத்தம் மற்றும் சத்தமற்ற நிலையில் அழித்துவிடும் - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |