வெடுக்குநாறி விவகாரத்தில் இந்தியா மௌனம் காக்க கூடாது : சரவணபவன்
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் தலையிட அதிகாரமுள்ள தரப்பாக இருக்கும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் ஆதரவை முற்றாக இழக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதியாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதிப்படை
மேலும் தெரிவிக்கையில், “வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைதியாக வழிபாடு நடத்தியவர்கள் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிராந்தியத்தில் வல்லரசாக நிலைநிறுத்த முயற்சிக்கும் இந்தியாவே, இந்து மதத்தின் காவலனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றது. வெடுக்குநாறிமலையில் நடப்பதும் இந்தியாவுக்குத் தெரியும். ஆனால் இந்தியா மௌனம் காக்கின்றது.
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை என்ற பெயரில் கால்பதித்தபோது எமது மக்கள் மாலை மரியாதையுடன் வரவேற்றார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற நிலைமை உருவானது.
இதை உருவாக்கியது யார்? எமது மக்களிடம் வெறுப்பை அவர்களே சம்பாதித்துக்கொண்டார்கள். இறுதிப் போரின் போது கூட கடைசிக்கணத்திலாவது இந்தியா தலையிட்டு எம்மைக் காப்பாற்றும், எதையாவது செய்யும் என்று ஒவ்வொரு தமிழனும் நம்பிக்கொண்டிருந்தான்.
பிராந்திய நலன்
ஆனால் அதில் எல்லாம் மண் அள்ளிப்போட்டது இந்தியா. இப்போதும்கூட எமது மக்கள் இந்தியாவை முற்றாக வெறுக்கவில்லை. அவர்களிடம் இந்தியாவைப்பற்றி இருக்கின்ற கடைசி நம்பிக்கையைக் கூட தக்கவைப்பதற்கு முயலவில்லை என்பதுதான் கவலையாக இருக்கின்றது.

இலங்கை அரசை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பது இந்தியா மாத்திரம்தான். ஆனால் இந்தியாவும் தனது பிராந்திய நலனுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. ஆனால் இந்தியா அதைச் சீண்டிக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களிடத்திலிருந்து இந்தியா தூர விலகிச் சென்று கொண்டே இருக்கின்றது.
இது இந்தப் பிராந்தியத்தில் வேறு சக்திகள் தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தும். இந்தியா இதைக் கவனத்தில் கொள்வது நல்லது” என்றும் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri