இடைவிடாத உணவுத்தவிர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தியுள்ள ஆய்வு
இடைவிடாத உணவுத்தவிர்ப்பினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் (American heart Association) ஆய்வானது சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
தினமும் எட்டு மணிநேரம் உணவு உண்ட நிலையில் மீதமுள்ள 16 மணிநேரம் உணவை உண்ணாமல் இருப்பவர்களுக்கு இதய நோயால் இறப்பு சதவீதம் அதிகம் என்று கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக கட்டுப்படுத்துவது இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தில் 91 சதவீதம் அதிகரிப்புடன் தொடர்புடையது என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
மரண அபாயம்
மருத்துவர் விக்டர் ஜாங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் சராசரியாக 49 வயதுடைய சுமார் 20,000 நபர்களை இதற்காக ஆய்வு செய்துள்ளனர்.
இதன் முடிவில் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துபவர்கள் 12 அல்லது 16 மணிநேரங்களில் சாப்பிட்டவர்களை விட 91 சதவீதம் இதய நோயால் இறப்பதற்கான ஆபத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிடுபவர்கள் நோயால் இறக்கும் வாய்ப்பு குறைவு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, உணவு நேரத்தை குறைக்கும் காரணத்தினால் ஒட்டுமொத்த மரண அபாயத்தைக் குறைக்கமுடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடல் எடை
தினமும் எட்டு மணிநேரம் போன்ற ஒரு குறுகிய காலத்திற்கு தினசரி உணவு நேரத்தை கட்டுப்படுத்துவது உடல் எடையை குறைக்க மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக கருதப்பட்டு வருகிறது.
எனினும், அதனை தமது ஆய்வுகள் நிரூபிக்கவில்லை என்று மருத்துவர் ஜாங் கூறியுள்ளார்.
எட்டு மணி நேரக் கட்டுப்படுத்தப்பட்ட உணவு அட்டவணையைப் பின்பற்றுபவர்கள் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கண்டு தாம் ஆச்சரியப்பட்ட போதும் தமது ஆராய்ச்சியின் முடிவு தெளிவானது என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |