ஜனாதிபதி தேர்தலில் கொள்ளையடிக்கப்படும் தமிழ் மக்களின் வாக்குகள்: நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு
தமிழ், முஸ்லிம் இளைஞர்களே ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இடம் கொடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில்(Batticaloa) நேற்று (25.05.2024) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும்.
காரணம் ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர்.
பிரதேசத்திலுள்ள அரசியல்கட்சிகள் மக்களின் வாக்குகளை தமது தேவைக்கு பாவிக்கின்றனர்.
அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதுடன் அந்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளராக தமிழ், சிங்கள், முஸ்லிம், பறங்கிய, மலேய மக்களால் விரும்ப கூடிய ஒருவரையே வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம்.
வரலாற்றை எடுத்துக் கொண்டால் மந்திரி, அமைச்சர், போன்ற உரிய அரசியல் வாதிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
எனினும், தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அபிவிருத்தி வேலை செய்தது மகிந்த ராஜபக்ச மாத்திரமே.
அவருக்கு வாக்குகள் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இந்த நாட்டில் வாழும் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலேயர்கள் என எல்லோரும் ஒரே நாடு என அபிவிருத்தி செய்யவேண்டும்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் அதிக அபிவிருத்தியை செய்தோம். அப்போது மத்தளை அதிவேக பாதையை அறுகம்பை ஊடாக மட்டக்களப்பு வரைக்கு கொண்டுவர திட்டமிட்டோம்.
எனினும், ஆட்சி மாறியதால் அதனை செய்யமுடியாமல் போனதுடன் அந்த ஆட்சி காலத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை செய்யமுடியாமல் போனது.
இனிவரும் தேர்தலுக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
மட்டக்களப்பில் கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் எங்கள் ஆணிவேர்கள், எனவே எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுக்க நீங்கள் செயற்படுவீர்கள் என நம்புகின்றேன் ”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |